தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேன் செல்கிறார் மோடி

1 mins read
c168766b-c236-45ce-9bd2-00089bb2b61a
சென்ற ஆண்டு ஜப்பானின் ஹிரோ‌ஷிமா நகரில் நடைபெற்ற ஜி7 கூட்டத்தின்போது சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (இடது), உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உக்ரேனுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்திய வெளியுறவு அமைச்சு, திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 19) இத்தகவலை வெளியிட்டது. ர‌ஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்த பிறகு முதன்முறையாக திரு மோடி உக்ரேனுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

மேலும், ர‌ஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்து சுமார் ஒரு மாதம் கழித்து திரு மோடி உக்ரேன் செல்கிறார்.

திங்கட்கிழமை மாலை நிலவரப்படி அவரின் பயணம் குறித்த மேல்விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது. திரு மோடி, உக்ரேன் தலைநகர் கியவ்வுக்கு இம்மாதம் பயணம் மேற்கொள்வார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் பல ர‌ஷ்யா மீது தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. எனினும், ர‌ஷ்யாவுடன் நட்பாக இருக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதனுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகின்றன.

உக்ரேன் போர் தொடர்பில் இந்தியா, ர‌ஷ்யாவை நேரடியாகக் குறைகூறவில்லை. எனினும், பேச்சுவார்த்தை, அரசதந்திர நடவடிக்கைகளின் வாயிலாகப் பூசலுக்குத் தீர்வுகாணுமாறு அண்டை நாடுகளான ர‌ஷ்யாவையும் உக்ரேனையும் இந்தியா கேட்டுக்கொண்டிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்