மும்பை: மும்பையில் நடைபெற்ற வங்கிகள், நிதித்துறை மற்றும் காப்பீடு உச்சி மாநாட்டில் இந்தியர்களின் மனமாற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியிருந்தார்.
“நீண்டகாலமாக தங்கள் சேமிப்புகளுக்காக வங்கிகளைச் சார்ந்திருந்த இந்தியக் குடும்பங்கள், இப்போது பங்குச்சந்தைகள் மற்றும் நிதிசார் இடைத்தரகர்கள் பக்கம் அதிகளவில் திரும்புகின்றனர்” என்று அவர் கூறினார்.
இந்தியாவில் முறைசார் முதலீட்டு திட்ட முறையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அல்லது பங்குகளை வாங்க, விற்க டீமேட் கணக்கு (Demat Account) என்பது அவசியம். முதலீட்டாளர்களுக்கும் இந்திய பங்குச் சந்தைக்கும் இடைத்தரகர்களாக செயல்படும் நிதிசார் நிறுவனங்கள் மூலம் ஒருவர் டீமேட் கணக்கு தொடங்கலாம்.
“இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, இந்தியாவின் மொத்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 16.2 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஜூன் மாதம் மட்டும் 42 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன,” என மோதிலால் ஓஸ்வால் எனும் நிதிச் சேவை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், மொத்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 11.4 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த நிதியாண்டில் மட்டும் (2024-2025) ஒவ்வொரு மாதமும் சராசரியாக 34 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்படுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கொரோனா கொள்ளை நோய் காலத்திற்குப் பிறகு பங்குச்சந்தை மீதான இளம் தலைமுறையினரின் ஆர்வம், முதலீடுகள் மீதான அதிக வருவாய், டீமேட் கணக்குகள் தொடங்குவதற்கான எளிமையான முறைகள், 2020 முதல் தொடர்ந்து அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அந்த அறிக்கை பட்டியலிடுகிறது.

