புனே: பருவநிலை மாற்றத்தின் விளைவாக வெப்ப அலைகள், திடீர் வெள்ளம், சூறாவளிகள் ஆகியவை தற்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் ஆகிவிட்டன. ஆனால் இவற்றுக்கு இப்போது சில நுண்ணுயிர்கள் தீர்வு ஏற்படுத்த முடியும் என இந்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏ.ஆர்.ஐ) ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற நுண்ணுயிர்கள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இந்த நுண்ணுயிர்கள் ‘மீத்தனோட்ரோஃப்கள்’ அல்லது ‘மீத்தேன்-ஆக்சிடைசிங் பாக்டீரியாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அதாவது இவை மீத்தேன் வாயுவை உட்கொண்டு வாழ்கின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இந்தப் புதிய வகை நுண்ணுயிர்கள் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புவி வெப்பமடைதலை ஏற்படுத்தும் முக்கிய பசுமை இல்ல வாயுக்களில் மீத்தேன் ஒன்றாகும்.
புனேயில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு, பத்து ஆண்டுகளாக இந்த நுண்ணுயிர் குறித்து ஆராய்ச்சி செய்து, தாங்கள் கண்டுபிடித்த நுண்ணுயிர் இனங்கள் எப்படிச் சிறப்பு வாய்ந்தவை என்று ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
இந்த நுண்ணுயிர்கள் பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கு மட்டுமின்றி விவசாயத்திற்கும் உதவும் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

