புதுடெல்லி: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இருக்கும் அதிபர் மாளிகைக்கு வருகைதந்த அவரைக் கட்டியணைத்து, தனது அன்பைப் பரிமாறிக்கொண்டார் இந்தியப் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து மலேசிய பிரதமருக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து புதுடெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் திரு அன்வார் இப்ராகிம் கையெழுத்திட்டதுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து உரையாடினார்.
புதுடெல்லியில் இருக்கும் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் மலேசியப் பிரதமர் அன்வாரும் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் இருநாட்டு தரப்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், இருநாட்டு பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஒத்துழைப்பு வழங்கிய அன்வர் இப்ராகிமுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியா-மலேசியா இடையேயான நட்புறவு 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கான முதலீடு 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பகுதி மின்கடத்தி, ஏஐ போன்ற புதிய தொழில்நுட்பத் துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இந்தியாவின் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (யுபிஐ) மற்றும் மலேசியாவின் பேனெட் பணப்பரிவர்த்தனையை இணைக்கும் பணியில் ஈடுபடுவோம் என்றும் அவர் கூறினார்.

