புதுடெல்லி: கனடாவில் டொரோண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பருக் வளாகத்தில் இருபது வயது இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டவர் தப்பியோடிவிட்டதாக காவல்துறை கூறியது.
ஷிவாங் அவஸ்தி என்ற அந்த மாணவர் மருத்துவம் படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) அன்று அவர் துப்பாக்கிக்குண்டு காயத்துடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.34 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் சச்சரவு குறித்து தகவல் வந்ததாக காவல்துறை கூறியது.
அங்கு காவல்துறையினர் சென்றபோது குண்டடிபட்டு ஒருவர் மயக்க நிலையில் காணப்பட்டார். சோதனைக்குப் பின்னர், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதிசெய்யப்பட்டதாக காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
காவல்துறையினர் வருவதற்கு முன்பே சந்தேக நபர் ஓடி விட்டார். அவரை காவல்துறை தேடி வருகிறது.
இதற்கிடையே ஷிவாங்க் அவஸ்தியின் துயரமான மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று டொரோண்டோவில் உள்ள இந்திய தூதகரம் கூறியுள்ளது.

