லக்னோ வணிக வளாகத்தில் தீ, 15 பேர் உயிரிழப்பு

லக்னோ வணிக வளாகத்தில் தீ, 15 பேர் உயிரிழப்பு

2 mins read
ffd7890a-0f56-4679-bb15-5bd67c67af78
தீயணைப்பு, மீட்புப் படையினர் கட்டடத்தின் சுவரில் பெரிய துளையை ஏற்படுத்தி, அதன் வழியாகக் காயமடைந்தவர்களை மீட்பதற்கான படுக்கைகளை உள்ளே கொண்டு சென்றனர். - படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்
multi-img1 of 3

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வணிகக் கட்டடம் ஒன்றில் திங்கட்கிழமை (ஜூன் 22) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

அந்த கட்டடத்தில் அரசுத் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையம், செல்லப்பிராணிகள் விற்பனைக் கடை உள்ளிட்ட பல கடைகள் இயங்கி வந்துள்ளன.

தீ வேகமாகப் பரவியதால் கட்டடத்திற்குள் இருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த மாணவர்கள் சிலர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முதல் மாடியிலிருந்து கீழே குதித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டடத்திலிருந்து மீட்கப்பட்ட 22 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் 15 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். காயமடைந்த மற்ற ஏழு பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தீயணைப்பு, மீட்புப் படையினர் கட்டடத்தின் சுவரில் பெரிய துளையை ஏற்படுத்தி, அதன் வழியாகக் காயமடைந்தவர்களை மீட்பதற்கான படுக்கைகளை உள்ளே கொண்டு சென்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை உடனடியாகத் தொடர்புகொண்டு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்