திருப்பதி லட்டு கலப்பட நெய் வழக்கு: ரூ.129.85 கோடி சொத்துகள் முடக்கம்

திருப்பதி லட்டு கலப்பட நெய் வழக்கு: ரூ.129.85 கோடி சொத்துகள் முடக்கம்

கோப்புப் படம்: இடிவி பாரத்

15 Oct 2026 - 6:15 pm

2 mins read

திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் லட்டு தயாரிப்பதற்குக் கலப்பட நெய் விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கில், தொடர்புடைய நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்களுக்குச் சொந்தமான ரூ.129.85 கோடி மதிப்பிலான சொத்துகளை இந்திய அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.

‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரிமில்க்’, ‘ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷாலிட்டீஸ்’, ‘சுக்ரிதி ஃபுட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள், திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.234.5 கோடி மதிப்பிலான கலப்பட நெய்யை விநியோகித்ததாகவும், ஹவாலா வழியில் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாம் கர்னல் எண்ணெய், பாமோலினுடன் மோனோகிளிசரைடுகள், அசிட்டிக் அமில எஸ்டர், லாக்டிக் அமிலம், பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ரசாயனங்களைக் கலந்து நெய் தயாரித்து, அவற்றைச் சமையல் எண்ணெய்களாகக் கணக்கு காட்டியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

இந்தப் பரிவர்த்தனைகளில் கணக்குகளைச் சரி செய்வதற்காக, உண்மையான பால் பண்ணையைக் காட்டும் பொருட்டு, பால், நெய்யின் போலியான கொள்முதல்களும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் போன்ற துணைப் பொருள்களின் போலியான விற்பனைகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

இவ்வாறு போலி நிறுவனங்கள் மூலம் கொள்முதல், விற்பனை செய்ததாகக் காட்டி, வங்கிகளில் செலுத்தப்பட்ட பணத்தை ஹவாலா மூலம் ரொக்கமாகப் பெற்று இடைத்தரகர்களுக்கு பங்கு வழங்கியதும் அம்பலமானது.

‘சுக்ரிதி ஃபுட்ஸ்’, அதன் நிறுவனர் கைலாஷ் சந்த மங்களா, அவரது குடும்ப உறுப்பினர்களும் விசாரணையில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பதிவுசெய்யப்பட்ட வழக்கு, குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் அடிப்படையில் அடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக, 2026 மார்ச் மாதத்தில் 6 மாநிலங்களில் உள்ள 16 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.7 கோடி மதிப்பிலான ரொக்கம், வங்கி இருப்புகள் முடக்கப்பட்டன. இவ்வழக்கில் விபின் ஜெயின், கைலாஷ் சந்த் மங்களா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட, முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.132.55 கோடியாக உயர்ந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்