திருவனந்தபுரம்: துபாயில் இயங்கிவந்த ஈரான் மருத்துவமனை ஒன்று மூடப்பட்டதால் கேரளாவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடுமையான விசா கட்டுப்பாடுகளையும் வேலையை இழக்கும் சூழலையும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
துபாயில் உள்ள ஈரானின் செஞ்சிலுவை மருத்துவமனை அண்மையில் திடீரென மூடப்பட்டது. இதனால் ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் நிர்வாகம், துபாயில் உள்ள ஈரானிய செஞ்சிலுவை மருத்துவமனையை ‘வலுக்கட்டாயமாக’ மூடியதாகவும், நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் மருத்துவமனையின் சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் மருத்துவமனை மூடப்பட்டதை அடுத்து, அங்கு பணியாற்றி வந்த தாதியர், சுகாதாரப் பணியாளர்கள் பலர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் விதித்துள்ள விசா தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர் சதீசன், இது வேலைவாய்ப்பு, வருகை, சார்ந்தோர் விசாக்களைப் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விளைவாக, பல ஆண்டுகளாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் வாழ்ந்து பணியாற்றி வந்த குடும்பங்கள் தற்போது நிச்சயமற்ற தன்மை, நிதி நெருக்கடி, தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயமான, இரக்கமுள்ள ஒரு தீர்வைப் பெறுவதற்கு, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உதவுமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டேன்,” என்று திரு சுதீசன் மேலும் தெரிவித்துள்ளார்.


