காங்கிரஸ் அலுவலகத்தில் திருடிவிட்டு ‘ஐ லவ் யூ’ என எழுதிய வினோதத் திருடன்

காங்கிரஸ் அலுவலகத்தில் திருடிவிட்டு ‘ஐ லவ் யூ’ என எழுதிய வினோதத் திருடன்

2 mins read
d17b4956-eb90-4051-9b80-76fb9956b9ab
காங்கிரஸ் கொடியுடன் தொண்டர்கள். - படம்: தினமணி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து தண்ணீர்க் குழாய்கள், விலைமதிப்பற்ற பொருள்களைத் திருடிய திருடன் ஒருவன், அங்கிருந்த சுவரில் ‘ஐ லவ் யூ அம்பிகாபூர்’ என்று எழுதிவிட்டுச் சென்றுள்ள வினோதச் சம்பவம் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் ‘ராஜீவ் பவன்’ என்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்திற்குள் நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர், அங்கிருந்த உறுப்பினர்கள் அறை, கழிவறைகளில் இருந்த இரும்புக் குழாய்களையும் சில விலைமதிப்பற்ற பொருள்களையும் திருடிச் சென்றுள்ளான்.

அத்துடன் நிறுத்தாமல், காவல்துறையினருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் சவால் விடுக்கும் வகையில், அங்குள்ள சுவரில் தனது கைப்பட ‘ஐ லவ் யூ அம்பிகாபூர்’ என்று எழுதிவைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளான்.

மறுநாள் காலை அலுவலகத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “திருடன் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்து, எந்தவிதப் பதற்றமும் பயமும் இன்றி சாவகாசமாக, பொறுமையாக ஒவ்வொரு குழாயையும் கழற்றித் திருடிச் சென்றுள்ளான்,” என்றனர்.

பொதுவாக, திருடர்கள் திருடிவிட்டுச் செல்லும்போது தடயங்களை மறைக்க முயல்வார்கள். ஆனால், இவ்வாறு சவால் விடும் வகையில் எழுதிவிட்டுச் செல்வது மிகவும் அரிதானது என்பதால், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், காங்கிரஸ் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் கடந்த சில நாள்களாக இயங்கவில்லை என்பதால், திருடனின் அடையாளத்தைக் கண்டறிந்து அவனைக் கைது செய்வது காவல்துறையினருக்குப் பெரும் சவாலாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்