மும்பை: வீடுகளுக்குக் கதவுகளோ, பூட்டுகளோ இல்லாமல் ஒரு கிராம மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அது அதிசயத் தகவல்தான்.
மகாராஷ்டிர மாநிலத்தின் அகில்யாநகர் (முன்னர் அகமதுநகர்) மாவட்டத்தில் அமைந்துள்ளது சனி சிங்கணாபூர் கிராமம்.
ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்பு, பானஸ்நாலா ஆற்று வெள்ளத்தில் 1.5 மீட்டர் நீளமுள்ள பெரிய கருங்கல்லாலான சனி பகவான் சிலை ஒன்று கரை ஒதுங்கியதாகவும் அதை உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் தொட்டபோது ரத்தம் வழிந்ததாகவும் கூறப்படுகிறது.
அன்றிரவே கிராமத் தலைவரின் கனவில் தோன்றிய சனிபகவான், அச்சிலையைத் திறந்தவெளியில் நிறுவுமாறு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கிராம மக்கள் அனைவரையும் தானே பாதுகாப்பதாக வாக்களித்ததாகவும் நம்பப்படுகிறது.
இந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக, கிராமவாசிகளின் வீடுகளில் நிரந்தரக் கதவுகளோ பூட்டுகளோ அமைப்பதில்லை. விலங்குகள் உள்ளே நுழைவதைத் தடுக்க மட்டுமே மரப் பலகைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இங்குத் திருடுபவர்கள் பார்வை இழப்பார்கள் என்றும் ஏழரை ஆண்டுகள் கடுமையான சனி தோஷத்திற்கு ஆளாவார்கள் என்றும் அப்பகுதி மக்கள் இன்றளவும் நம்புகின்றனர்.
இவ்வழக்கம் கிராமத்துக்கு அருகே இயங்கும் பொது நிறுவனங்களுக்கும் விரிவடைந்தது. 2015ல் தொடங்கப்பட்ட காவல் நிலையத்திற்கு வழக்கமான முன் கதவு கிடையாது. மேலும், 2011ல் யூகோ வங்கி இங்குப் பாதுகாப்புக் கண்ணாடிக் கதவுகளுடன் கூடிய இந்தியாவின் முதல் ‘பூட்டில்லாக் கிளை’யைத் தொடங்கியது.
காலப்போக்கில் 2010, 2011ஆம் ஆண்டுகளில் சில திருட்டுச் சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள், நவீனப் பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வந்தபோதிலும் பூட்டுகளற்ற இந்தக் கிராமம் பக்தர்களோடு சுற்றுலாப் பயணிகளையும் கவர்கிறது.


