தெருநாய் பிரச்சினை: நேரில் முன்னிலையாக மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

1 mins read
ee0081ec-4d5d-4169-a162-b5b61605d3e1
தமிழ்நாடு, டெல்லி உள்பட இந்தியாவெங்கும் தெருநாய்களின் தொல்லை பெரிய பிரச்சினையாகி உள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தெருநாய் பிரச்சினை தொடா்பான வழக்கில் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களும் நேரில் முன்னிலையாக உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (அக்டோபர் 27) உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் தெருநாய் தொல்லை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவெங்கிலும் உயர் நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றியது.

அதையடுத்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களையும் வழக்கில் ஒரு தரப்பாகச் சோ்த்தது. அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிட்டது.

திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தெலுங்கானா, மேற்கு வங்கம், டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன.

அதனால், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களும் நவம்பர் 3ஆம் தேதி நேரில் முன்னிலையாகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்