புனே: தனது மூன்று வயது மகளைப் பறிகொடுத்த சோகத்தை, சமூக விழிப்புணர்வுக்கான போராட்டமாக மாற்றியுள்ளார் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுபம் குல்கர்னி.
மகாராஷ்டிராவின் புனே நகரில் நடைபெற்ற பிள்ளையார் சதுர்த்தி விழாக்களின்போது, பெண்கள் பாதுகாப்பு, குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 12 நிமிட தெருக்கூத்து நாடகம் நடத்தப்பட்டது.
கடந்த மே மாதம் நஸ்ராபூர் கிராமத்தில் மூன்று வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 65 வயதான குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நீதிமன்றத் தீர்ப்பு மனநிறைவு அளித்தாலும் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் தொடர்வதால், சுபம் குல்கர்னி தன் மகளின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, திரைப்பட இயக்குநர் பிரமோத் பிரபூல்கரின் உதவியுடன் ஒரு தெருக்கூத்து நாடகத்தை வடிவமைத்தார்.
15 இளம் கலைஞர்கள் பங்கேற்ற இந்த நாடகம், புனே நகரில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றப்பட்டது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களையும் அவர்களின் குடும்பத்தையும் சமூகம் தவறான கோணத்தில் அணுகக் கூடாது என்றும் குற்றங்களை மறைக்காமல் உடனடியாகக் காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும் என்றும் இந்நாடகம் வலியுறுத்துகிறது.
தன் மகளுக்கு நடந்த கொடுமை வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது எனக் கூறும் குல்கர்னி, அடுத்து பள்ளிகள், நவராத்திரி விழாக்களிலும் மாநிலம் முழுவதும் இந்நாடகத்தை அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளார்.
