புதுடெல்லி: தனது வருகையின்போது, இந்தியக் கலாசாரம், உணவு வகைகள் மற்றும் ஆன்மிகத்தின் மீதான தனது விருப்பம் குறித்துப் பேசிய அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட், தனது வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும் பகவத் கீதை அளப்பறிய ஆற்றலை கற்பித்ததாகக் கூறியுள்ளார்.
இந்தியா மீதான தனது ஆழ்ந்த அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ள துளசி கப்பார்ட், “இந்தியாவில் இருக்கும்போது எப்போதும் தன் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்,” என்றும் விவரித்தார்.
திங்களன்று ஏஎன்ஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “மக்கள் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். அன்பானவர்கள். உணவு எப்போதும் சுவையாக இருக்கும். தால் மக்கானி, பனீர் கொண்ட உணவு எனக்கு மிகவும் பிடித்தமானவை.
“நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். நான் இங்கு இருக்கும்போது என் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்,” என்று கப்பார்ட் கூறினார்.
அமெரிக்க ராணுவ ரிசர்வ் பிரிவில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சிறந்த சேவையாற்றியவர் கப்பார்ட்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கற்பித்த போதனைகள் தனது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு வலிமை, அமைதி, ஆறுதலை அளிக்கின்றன என்பதையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
“எனது தனிப்பட்ட ஆன்மிகப் பயிற்சியும் கடவுளுடனான பிணைப்பும் எனது வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
“ஒவ்வொரு நாளும் கடவுளுக்குப் பிரியமான முறையில் வாழவும் கடவுளின் அனைத்து குழந்தைகளுக்கும் சேவை செய்யவும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்,” என்று கப்பார்ட் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பகவத் கீதையைப் பற்றி அவர் கூறுகையில், “என் வாழ்க்கையின் வெவ்வேறு நேரங்களிலும் பகவத் கீதை எனக்குப் பயனளித்து வருகிறது.
“போர் மண்டலங்களில் பணியாற்றினாலும் சரி அல்லது எந்த ஒரு தருணத்தில் சவால்களை எதிர்கொண்டாலும் சரி, நான் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் அளித்த போதனைகளை நோக்கிச் செயல்படுகிறேன்.
“இந்தப் போதனைகள் எனது எல்லா நாள்களிலும் எனக்கு வலிமை, அமைதி, மிகுந்த ஆறுதலை அளிக்கின்றன,” என்றும் கப்பார்ட் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கப்பார்ட் தனது பல நாடுகளின் பயணத்தின் ஓர் அங்கமாக இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டார்.
இது அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணத்தைக் குறிக்கிறது. அவரது ஆசியப் பயணம் மார்ச் 18 அன்று நடைபெறும் ‘ரைசினா’ உரையாடலில் பங்கேற்று உரையாற்றுவதோடு முடிவடையும்.