அமராவதி: வங்கக் கடலில் ‘மோன்தா’ புயல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் பெருமழை பெய்யும் என்றும் அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர்.
இதனையடுத்து, ஏறத்தாழ 50,000 பேர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு, துயர்துடைப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயலால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படும் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அவசரகாலப் பணியாளர்களின் விடுப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன; அங்கு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மோன்தா’ புயல் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 28) தீவிர புயலாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கும் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே அது கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பலத்த காற்று வீசும் என்றும் இடி மின்னலுடன் பெருமழை பெய்யலாம் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
“காக்கிநாடா மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கிவிட்டது,” என்று பேரிடர் மேலாண்மை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகளில் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. புயலால் கிட்டத்தட்ட 3.9 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம் என மாநில அரசு எதிர்பார்க்கிறது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, சில மாவட்டங்களில் பெருமழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்கும்படி தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, புயல் எச்சரிக்கையை அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தொலைபேசிவழி தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது, புயலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திரு நாயுடு, பிரதமர் மோடியிடம் விவரித்தார்.
பின்னர், மாநில அரசின் தயார்நிலை குறித்து அமைச்சர்களுடனும் உயரதிகாரிகளுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

