புதுடெல்லி: இந்தியாவின் அனைத்துலகப் பயண ஆற்றலுக்குக் கிடைத்துள்ள பெரும் அங்கீகாரமாக, 2026க்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டுத் தரவரிசையில் இந்தியக் கடப்பிதழ் ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.
2025ல் 85வது இடத்தில் இருந்த இந்தியக் கடப்பிதழ், தற்போது 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் வளர்ந்துவரும் அரசதந்திர செல்வாக்கை இது வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் இந்தியக் குடிமக்கள் 55 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது அங்கு சென்றவுடன் பெறும் ‘விசா-ஆன்-அரைவல்’ முறையில் பயணம் செய்ய முடியும்.
அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் பிரத்தியேகத் தரவுகள் மற்றும் ‘ஹென்லி & பார்ட்னர்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், ஒரு நாட்டின் கடப்பிதழை வைத்திருப்பவர்கள் விசா இன்றி எத்தனை நாடுகளுக்குச் செல்ல முடியும் என்பதைக் கொண்டு இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
2026 குறியீட்டின்படி, இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு 55 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது அங்கு சென்றவுடன் விசா பெறும் அனுமதி கிடைத்துள்ளது. இது, மேம்பட்ட அனைத்துலகப் பயண வசதியையும் வளர்ந்துவரும் அரசதந்திர உறவுகளையும் காட்டுகிறது.
முன்னணி நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவினாலும் தரவரிசையில் இந்தியா அடைந்துள்ள இந்தத் தொடர்ச்சியான முன்னேற்றம், உலகளவில் இந்தியர்களுக்கான பயணச் சுதந்திரம் அதிகரிப்பதைக் குறிக்கிறது.
இதற்கு நேர்மாறாக, 2025ன் ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில், இந்தியா 85வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அப்போது 57 நாடுகளுக்குச் செல்லும் அனுமதி இருந்தபோதிலும், 2024ல் இருந்த 80வது இடத்திலிருந்து இந்தியா சரிந்தது. அந்தச் சரிவு, பயணச் சுதந்திரத்தில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டியதுடன், அனைத்துலக அளவில் பயண ஆற்றலை வலுப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளுக்கும் வழிவகுத்தது.
இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் தற்போது அண்டை நாடுகளை விட கூடுதல் பயணச் சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர். இருப்பினும், உலகின் பல பகுதிகளில், குறிப்பாக தரவரிசையில் மேலிடங்களில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களுக்கு இன்னும் சில கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கின்றன.

