புதுடெல்லி: இந்திய விமானப்படையின் தற்காப்பு, தாக்குதல் திறனை மேம்படுத்தும் வகையில், மிக்-29 போர் விமானங்களில் அதிநவீன அஸ்ராம் (ASRAAM) ஏவுகணைகளை இணைக்க மத்திய பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இப்போது இந்திய விமானப்படையின் வசமுள்ள மிக்-29 ரக போர் விமானங்களில், எதிரி நாட்டு விமானங்களை வான்வெளியிலேயே தாக்கி அழிக்கும் ரஷ்யத் தயாரிப்பான ஆர்-73 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவை அதிகபட்சமாக 10 முதல் 15 கி.மீ. தொலைவு வரை மட்டுமே சென்று தாக்கும் திறன் கொண்டவை.
தற்போதைய போர்ச் சூழலில் இந்தத் தொலைவு போதுமானதாக இல்லாததால், ஐரோப்பிய தயாரிப்பான நவீன அஸ்ராம் ஏவுகணைகளை இதில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அஸ்ராம் ஏவுகணைகள் ஏறக்குறைய 25 கி.மீ. தொலைவு வரை சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை படைத்தவை.
அஸ்ராம் ஏவுகணைகள் ஏற்கெனவே இந்திய விமானப்படையின் தேஜஸ், ஜாகுவார் போர் விமானங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது மிக்-29 விமானங்களிலும் இவற்றை இணைக்க ஏதுவாக, அந்த விமானங்களின் ஏவுதள அமைப்பில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இது தொடர்பாக, மேம்படுத்தப்பட்ட மிக்-29 விமானங்களுக்கான அஸ்ராம் ஏவுகணைகளை வழங்குமாறு ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்பிடிஏ நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சு ஒப்பந்த அறிக்கையைக் கோரியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த நவீன ஏவுகணை இணைப்பின் மூலம், மிக்-29 விமானங்களின் தாக்குதல் எல்லை இருமடங்காக அதிகரிக்கும்.
வான்வெளியில் எதிரி நாட்டு விமானங்களை எதிர்கொள்ளும்போது இந்திய விமானப்படைக்குக் கூடுதலான அளவில் சாதகமான சூழல் உருவாகும்.
இந்திய எல்லைப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் இந்திய விமானப்படையின் நவீனமயமாக்க நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

