மும்பையில் தூய்மையற்ற உணவகங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

மும்பையில் தூய்மையற்ற உணவகங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

2 mins read
7bef5d2b-b46d-4e5b-987b-b534bacf894b
உணவு தயாரிக்கப்படும் இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பது தொடர்பான விதிமுறைக்கு உட்பட்டு நடந்துகொள்ளாததற்காக மும்பையில் 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த பார்சி டெய்ரி மில்க் மூடப்பட்டது. தண்டனைக்காலம் முடிந்து அந்த உணவகம் தற்போது மீண்டும் இயங்கி வருகிறது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மும்பை: இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில், தூய்மையற்ற முறையில் இயங்கி வந்த பிரபல உணவகங்கள் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனைகளின்போது, புகழ்பெற்ற பனிக்கூழ் கடை ஒன்றில் எலிகள், ஈக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி காலாவதியான சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

அதேபோல, மற்றொரு பழம்பெரும் உணவகத்தில் அசுத்தமான பாத்திரங்களில் இறைச்சி வைக்கப்பட்டிருந்ததும் பூச்சிகள் மற்றும் காகங்கள் நுழையும் வகையில் திறந்தவெளி சன்னல்கள் இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து அவ்விரண்டு உணவகங்களும் உடனடியாக மூடப்பட்டன. மகாராஷ்டிர மாநில உணவுப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பின் புதிய தலைவரான துக்காராம் முண்டே தலைமையில் இந்த அதிரடி நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் ஏறத்தாழ 900 வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு, 100க்கும் மேற்பட்ட உணவகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சோதனையில் சொகுசு ஹோட்டல்கள் முதல் நூற்றாண்டு பழைமையான பிரபல ‘கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா’ வரை பல உணவகங்கள் சிக்கியுள்ளன.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் பேரளவில் வரவேற்பு கிடைத்துள்ளபோதிலும், முன் அறிவிப்பின்றி உரிமங்களை ரத்து செய்வதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

திரு முண்டே சிறப்பான முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாக மும்பை மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது பணியைத் தடுத்து அவரை பணி இடமாற்றம் செய்யக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மகாராஷ்டிரா மாநிலத்தில் போதுமான உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாததே இதுபோன்ற சிக்கல்களுக்கு முதன்மைக் காரணம் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்