குப்பைகளைப் போடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம்

குப்பைகளைப் போடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம்

2 mins read
1067344b-bbe1-4d3c-897f-73e2f9898200
இந்தியாவில் கண் இமைக்கும் நேரத்திற்குள் சாலையில் குப்பையைக் கொட்டும் அதே நபர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றால் ஒரு சிறிய சாக்லேட் தாளைக்கூட குப்பைத்தொட்டியில்தான் போடுகிறார்கள் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. - படங்கள்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: இந்தியாவில் பொது இடங்களில் குப்பைகளைப் போடும் அதே நபர்கள், வெளிநாடுகளில் தூய்மை விதிகளைத் தவறாமல் பின்பற்றுவதைச் சுட்டிக்காட்டி மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கண் இமைக்கும் நேரத்திற்குள் சாலையில் குப்பையைக் கொட்டும் அதே நபர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றால் ஒரு சிறிய சாக்லேட் தாளைக்கூட குப்பைத்தொட்டியில்தான் போடுகிறார்கள் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

தூய்மையைப் பேணுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதை வலியுறுத்திய நீதிமன்றம், விதிகளை மீறுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.

மும்பையில் உள்ள கஞ்சூர்மார்க் என்ற குப்பைக் கொட்டும் வளாகத்தால் ஏற்படும் மாசுபாடு, துர்நாற்றம், நச்சு வாயு வெளியேற்றம், சுகாதாரக் கேடுகள் தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். குல்கர்னி, ஆர்த்தி சாத்தே ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த கருத்துகளைத் தெரிவித்தது.

நகரைத் தூய்மையாக வைத்திருப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு அத்தியாவசியம் என்று கூறிய நீதிபதிகள், எவ்விதத் தயக்கமும் இன்றி கடுமையான விதிகளை அமல்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர்.

பொதுவெளியில் தூய்மை குறித்த மக்களின் அணுகுமுறை குறித்துக் கவலை தெரிவித்த நீதிபதிகள், குடிமக்கள் இந்தியாவைவிட்டு வெளியேறியவுடன் பல நேரங்களில் வேறுவிதமாக நடந்துகொள்கிறார்கள் என்று கூறினர்.

சாலைகளிலும் குறுகியத் தடங்களிலும் போடப்படும் குப்பைகள், குடியிருப்பாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் கடும் உடல்நலக் கேடுகளையும் சுகாதாரச் சிக்கல்களையும் ஏற்படுத்துவதை அவர்கள் சுட்டினர்.

உடனடியாகச் சீர்திருத்த நடவடிக்கைகளை ஒரு வாரத்திற்குள் எடுக்குமாறு மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைச் செய்யத் தவறினால், மேலும் பல கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் அது எச்சரித்தது.

குறிப்புச் சொற்கள்