மேற்கு வங்கத்தில் வேலை நிறுத்தப் போராட்டம்; பேருந்து, ரயில் சேவைகள் பாதிப்பு

மேற்கு வங்கத்தில் வேலை நிறுத்தப் போராட்டம்; பேருந்து, ரயில் சேவைகள் பாதிப்பு

2 mins read
369db144-0ed6-47cd-b766-28681a4c5021
நந்திகிராமில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கோல்கத்தாவில் உள்ளது ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.

அங்கு பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், கடந்த 9ஆம் தேதி அதிகாலை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி, ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் கோல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், மேற்கு வங்கத்தில் 12 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதனால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நாடியாவில் திரிணாமூல் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஆங்காங்கே ரயில் மறியல், சாலை மறியல், கடைகளை மூட வற்புறுத்தல் என பாஜகவினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரமாக்கினர்.

கோல்கத்தாவில் குறைந்த அளவிலேயே பேருந்துகள், வாடகை வாகனங்கள் ஓடின. இருப்பினும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின. கடைகளை மூட வலியுறுத்திய பாஜக தொண்டர்கள் பலரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. நகரின் முக்கியப் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அதிகமாக இருந்தது.

பங்காவோன் - சீல்டா இடையே ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. முர்ஷிதாபாத், பாரக்போரிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாநில போக்குவரத்துக்கு கழகப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் தலைக்கவசங்கள் அணிந்து வாகனங்களை இயக்குவதைக் காண முடிந்தது.

நந்திகிராமில் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பங்குரா பேருந்து நிலையத்திலும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

செவ்வாய்க் கிழமை ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் கோல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறைக்களமாக மாறின. இதில் 100 மாணவர்களும், 15 காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர்.

போராட்டத்தை நடத்தியதற்காக 220 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர், பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்