தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பகுதிநேரமாகப் பணிக்குத் திரும்புவதாக மேற்கு வங்க மருத்துவர்கள் அறிவிப்பு

2 mins read
79612265-bc7c-48cc-bd92-9e68d6de593e
செப்டம்பர் 16ஆம் தேதி கோல்கத்தா அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகக் காத்திருந்த நோயாளிகள். - படம்: இபிஏ

கோல்கத்தா: இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளம் மருத்துவர்கள் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கோல்கத்தாவின் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதுப் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவும் பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பை வலியுறுத்தியும் மேற்கு வங்க இளம் மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதனையடுத்து, மருத்துவமனைப் பாதுகாப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை (செப்டம்பர் 21) முதல் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளில் மீண்டும் ஈடுபடவுள்ளதாக மேற்கு வங்க இளம் மருத்துவர்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதிலிருந்தும் ஏறத்தாழ 7,000 இளம் மருத்துவர்கள் அவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

“அரசாங்கம் நடத்தும் எல்லா மருத்துவமனைகளிலும் நீதிக்கான போராட்டம் தொடரும். அதே நேரத்தில், மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ளோம்,” என்று மேற்கு வங்க இளம் மருத்துவர்கள் முன்னணியைச் சேர்ந்த டாக்டர் அனிகேத் மகத்தோ கூறியிருக்கிறார்.

கூடுதல் கண்காணிப்புப் படக்கருவிகளைப் பொருத்துதல் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு, பெண் பாதுகாப்பு ஊழியர்களைப் பணியமர்த்தல், போதிய மின்விளக்குகள், கழிப்பறை, ஓய்விட வசதி போன்றவை இளம் மருத்துவர்களின் கோரிக்கைகளாக உள்ளன.

பெண் மருத்துவர் கொல்லப்பட்டது தொடர்பில் காவல்துறைத் தொண்டூழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆதாரங்களைச் சேதப்படுத்தியது, ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோல்கத்தா மாநகரக் காவல்துறை தலைவரும் மாற்றப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்