தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுடெல்லியில் புழுதிப் புயல்; விமானச் சேவைகள் தாமதம்

2 mins read
5aad731b-1bed-44b2-85ce-8f50bbbc673c
புழுதிப்புயலின்போது காற்றின் வேகம், மணிக்கு 60 கிலோமீட்டர் வரை சென்றதாக இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. - படம்: இந்திய ஊடகம்
புழுதிப்புயலின்போது காற்றின் வேகம், மணிக்கு 60 கிலோமீட்டர் வரை சென்றதாக இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
புழுதிப்புயலின்போது காற்றின் வேகம், மணிக்கு 60 கிலோமீட்டர் வரை சென்றதாக இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லியில் சனிக்கிழமை மாலையின்போது அடித்த பலமான புழுதிப் புயல், மக்களின் இயல்நிலையை பாதித்ததுடன் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்கு இடையுறு விளைவித்தது.

ஏப்ரல் 11ஆம் தேதி மாலை கிட்டத்தட்ட 5 மணிக்கு நகரை உலுக்கிய அந்தப் புயலால் இதுவரை குறைந்தது 350 உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள் தாமதமடைந்தன. சில சேவைகளின் பயணப் பாதை மாற்றப்பட்டன.

பயணத் தாமதங்களால் பல மணி நேரமாக விமான நிலையங்களில் காத்திருந்த பயணிகள் தங்கள் கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியதைக் காட்டும் காணாெளிகள் இந்திய இணையவாசிகளிடையே பரவி வருகின்றன.

புழுதிப் புயலின்போது காற்றின் வேகம், மணிக்கு 60 கிலோமீட்டர் வரை சென்றதாக இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. அத்துடன் வெப்பநிலையும் காற்றுத்தரமும் வெகுவாகக் குறைந்ததாகவும் ஆய்வகம் கூறியது.

வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலையில் விமானங்கள் திருப்பி விடப்பட்டதாலும், தாமதமாக தரையிறங்கியதாலும் விமான நிலையங்களில் திடீரென கூட்டம் அதிகரித்ததாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. மோசமான வானிலை காரணமாக நான்கு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

காற்றோடு கலந்த புழுதி எங்கும் வீசியதை அடுத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததாகவும் மின்சாரக் கம்பிவடங்கள் துண்டித்துப் போனதாகவும் நகர அதிகாரிகளுக்குப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாதிப்புகளைச் சரிசெய்ய இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அவசரகால நடவடிக்கை குழுக்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

சனிக்கிழமை (ஏப்ரல் 12) பிற்பகல் 2 மணி நிலவரப்படி, டெல்லி விமான நிலையம், “விமான நடவடிக்கைகள் மேம்பட்டு வருகின்றன. ஆனால் சில விமானங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன,” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க எங்கள் களக் குழுக்களும் அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்,” என்று டெல்லி விமான நிலையம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வகம் இப்பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் இருக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களைப் பாதுகாக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அது வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்