‘பாரா கிளைடிங்’ உதவியோடு தேர்வு மையத்துக்குப் பறந்த மாணவர்

2 mins read
9d229c3c-8849-4ec6-85f7-a7539381565d
சமர்த் மஹாங்கடே. - படம்: ஊடகம்

மும்பை: கல்லூரித் தேர்வுக்கு நேரமாகிவிட்டபோதும் பதற்றம் அடையாத மாணவர் ஒருவர், ‘பாரா கிளைடிங்’ உதவியோடு தேர்வு மையத்தை உரிய நேரத்தில் சென்றடைந்தார். இந்த ருசிகரச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள பசரானி கிராமத்தைச் சேர்ந்த சமர்த் மஹாங்கடே என்ற மாணவர் வணிகத்துறையில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 19 வயதான இவர், பகுதி நேரமாக பழரசக்கடை ஒன்றில் வேலையும் பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் பருவத் தேர்வை ஒத்திவைப்பதாக அண்மையில் அறிவித்ததையடுத்து பழரசக்கடை பணிக்காக கூடுதல் நேரத்தை ஒதுக்கியிருந்தார் சமர்த்.

இதனால் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வு அடுத்து எந்த தேதியில் நடத்தப்படும் எனக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு குறித்து சமர்த்துக்கு எந்த விவரமும் தெரியாமல் போனது.

இந்நிலையில், தேர்வு நடக்கும் நாளன்று அவரது கல்லூரி நண்பர் திடீரென தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தபோது அதிர்ந்துபோனார் சமர்த்.

அடுத்த அரை மணி நேரத்தில் தேர்வு தொடங்க இருந்தது. ஆனால் தேர்வு மையத்துக்குச் செல்லும் வழித்தடம் முழுவதும் கடும் வாகன நெரிசல் காணப்படும் என்பதால் சற்றே குழம்பிப்போனார் சமர்த். எனினும் பதற்றம் அடையாமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் பத்து நிமிடங்கள் கடந்துவிட்டன.

தேர்வுக்கு இருபது நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், போக்குவரத்தில் சிக்காமல் இருக்க ‘பாரா கிளைடிங்’ மூலம் செல்ல முடிவெடுத்தார் சமர்த்.

அருகே உள்ள ‘பாரா கிளைடிங்’ பயிற்சியாளர் கோவிந்த் என்பவரை அணுகி எப்படியாவது தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். அவரது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு கோவிந்தும் மாணவருடன் உடனடியாகப் புறப்பட்டார்.

அடுத்த நிமிடமே இருவரும் ‘பாரா கிளைடிங்’ மூலம் பறந்தனர். சரியாகத் தேர்வு மையம் மேலே சென்றபோது மாணவர் சமர்த்தைப் பாதுகாப்பாக கிழே இறக்கிவிட்டார் கோவிந்த். இதனால் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குள் நுழைந்த சமர்த், தேர்வைச் சிறப்பாக எழுதி முடித்துள்ளார்.

அவரும் கோவிந்தும் ‘பாரா கிளைடிங்’ மூலம் பறந்த காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

மாணவரின் மன உறுதியை சிவசேனா எம்பி மிலிந்த் தியோரா உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்