வதோதரா: பள்ளியில் நண்பகல் உணவு இடைவேளையின்போது வகுப்பறைச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
இச்சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம், வதோதரா நகரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குருகுலப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நிகழ்ந்தது.
அவ்வகுப்பறை பள்ளியின் இரண்டாம் தளத்தில் இருந்தது.
நண்பகல் 12.30 மணியளவில் சுவர் இடிந்து விழுந்ததாகப் பள்ளியின் முதல்வர் ரூபால் ஷா தெரிவித்தார்.
“திடீரெனப் பெருஞ்சத்தம் கேட்டதும் நாங்கள் ஓடிச்சென்று பார்த்தோம். சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் தலையில் காயமுற்றார். மற்ற மாணவர்களை உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினோம்,” என்று அவர் விளக்கினார்.
சுவர் இடிந்து விழுந்ததில் கீழே நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் 10 - 12 மிதிவண்டிகளும் சேதமடைந்ததாக முதல்வர் ஷா தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும் வதோதரா தீயணைப்புப் படையினர் அப்பள்ளிக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
காயமடைந்த மாணவர் ஏழாம் வகுப்பில் பயின்றுவருவதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வகுப்பறைச் சுவர் இடிந்து விழுந்த காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது. அதில், சுவர் இடிந்து விழுவதும், மாணவர்கள் சிலர் கீழே விழுவதும், மற்ற மாணவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடுவதும் தெரிகிறது.