காசர்கோடு: கேரளாவில் அரசுத் தேர்வு எழுதுவதற்காகச் சென்ற பெண்ணின் தேர்வு அனுமதிச்சீட்டைக் கழுகு ஒன்று பறித்துச் சென்ற சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்தது.
காசர்கோட்டில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் அரசுப் பணிக்கான தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் செயலர் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள் அத்தேர்வை எழுதினர்.
காலை 7.30 மணிக்குத் தேர்வு தொடங்கவிருந்த நிலையில் தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு அறைக்கு வெளியே காத்திருந்தனர்.
சில நிமிடங்களுக்கு முன்பு, அங்கு வந்த செம்பருந்து வகையைச் சேர்ந்த கழுகு ஒன்று, தேர்வு அறையின் வாயிலில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் தேர்வு அனுமதிச்சீட்டைப் பறித்துச் சென்று, அங்கிருந்த சன்னல் கதவு மீது அமர்ந்துகொண்டது.
இதனால், அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் அவர் உறைந்துபோனார்.
தேர்வு அனுமதிச்சீட்டு இல்லாமல் அவரால் தேர்வு எழுத முடியாது. இந்நிலையில் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் கழுகைப் பார்த்துக் கூச்சலிட்டனர்.
கழுகு அசைவதாக இல்லை. ஆனால், தேர்வு தொடங்க ஒரு சில நிமிடங்கள் இருந்தபோது, அந்தக் கழுகு அங்கிருந்து பறந்து சென்றது. இதனால் அனுமதிச்சீட்டு கீழே விழுந்தது. அந்தப் பெண் அதனை எடுத்துக்கொண்டு தேர்வு எழுதச் சென்றார்.

