லத்தூர்: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், லாத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட சண்டையில் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
லாத்தூரின் அவுசா சாலையில் அமைந்துள்ள அந்தக் கல்லூரியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) மாலை மூன்றாம் ஆண்டு படிக்கும் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது.
தனிப்பட்ட தகராறு காரணமாக மூண்ட அந்தச் சண்டையில் இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.
அவர்கள் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
அப்போது, அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த 20 வயது விக்ரம் நாராயண் என்ற மாணரைச் சண்டையில் ஈடுபட்டவர்கள் கத்தியால் குத்தியதாகவும் கடும் காயமுற்ற அந்த மாணவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலில் காயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களைக் கைதுசெய்தனர்.
மகாராஷ்டிரக் கல்லூரியில் மாணவர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டது மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கவேண்டும் என்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் லாத்தூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அமித் தேஷ்முக் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

