லத்தூர்: மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட சண்டையில், மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
லத்தூரின் அவுசா சாலையில் உள்ள அந்தக் கல்லூரியில், திங்கட்கிழமை (பிப்ரவரி 16) மாலை மூன்றாம் ஆண்டு படிக்கும் இரண்டு வெவ்வேறு மாணவர்க் குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது.
தனிப்பட்ட தகராறு காரணமாக மூண்ட அந்தச் சண்டையில் இருதரப்பினரும் கடுமையாக மோதினர்.
அதனைத் தொடர்ந்து, சிலர் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த 20 வயது விக்ரம் நாராயண் என்ற மாணவர் ஒருவரை, சண்டையில் ஈடுபட்டவர்கள் கத்தியால் குத்தியதாகவும் கடும் காயமுற்ற அந்த மாணவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதோடு, தாக்குதலில் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரக் கல்லூரியில் மாணவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அதுபோன்ற குற்றங்களைத் தடுக்கவேண்டும் என்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் லத்தூரின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அமித் தேஷ்முக் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

