மாடியில் படித்துக்கொண்டிருந்த மாணவி குரங்கு தள்ளிவிட்டதால் உயிரிழப்பு

1 mins read
6459997f-5c6b-468b-b859-ac0ccdb0eb60
படிகளில் இறங்கித் தப்ப முயன்ற பிரியா குமாரிமீது குரங்கு ஒன்று பாய்ந்து தள்ளிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. - மாதிரிப்படம்

பாட்னா: குரங்கு தள்ளிவிட்டதால் தன் வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மாண்டுபோன சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்தது.

சிவான் மாவட்டம், மகர் எனும் சிற்றூரைச் சேர்ந்த பிரியா குமாரி என்ற அம்மாணவி, விரைவில் வரவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகிவந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை (ஜனவரி 25) பிற்பகல் நேரத்தில் வீட்டிற்குள் குளிராக இருந்ததால் அவர் தம் வீட்டின் மாடியில் படித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. அப்போது, திடீரென அங்கு வந்த குரங்குக் கூட்டம் அவரைத் துன்புறுத்தின என்றும் அச்சத்தில் அவரால் அங்கிருந்து நகர முடியவில்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

அக்கம்பக்கத்தினர் திரண்டு சத்தமெழுப்பி குரங்குக் கூட்டத்தை விரட்ட முயலவே, துணிச்சலை வரவழைத்துக்கொண்டு படிகளில் இறங்கித் தப்ப முயன்றார் பிரியா.

ஆயினும், அங்கிருந்த ஒரு குரங்கு பிரியாமீது பாய்ந்து தள்ளிவிட்டதால் அவர் மாடியிலிருந்து கீழே விழுந்தார். அதனால், தலை உட்பட பல இடங்களில் அவர் கடுமையாகக் காயமுற்றார்.

சுயநினைவற்ற நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனாலும், ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறி மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் எவர்மீதும் புகார் அளிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறியது. கடந்த சில காலமாகவே தங்கள் பகுதியில் குரங்குத் தொல்லை அதிகரித்து வருகிறது என்றும் அவற்றின் மூர்க்கத்தனத்தால் இப்போது ஓர் உயிர் பறிபோய்விட்டது என்றும் கூறி, அப்பகுதிவாசிகள் ஆதங்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்