தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணப்பெட்டிக்குள் மறைந்தபடி மாணவர் விடுதிக்குள் செல்ல முயன்ற மாணவி

1 mins read
1356e1e2-a5af-4269-9abc-3e27e655a483
விடுதிக் காவலர்கள் பயணப்பெட்டியைத் திறப்பதும் அதில் மாணவி ஒருவர் மறைந்திருப்பதும் காணொளியில் தெரிகிறது. - காணொளிப்படம்: எக்ஸ்/கர் கே கலேஷ்

சோனிபட்: பயணப்பெட்டிக்குள் மறைந்தபடி மாணவர்களின் விடுதிக்குள் செல்ல முயன்ற மாணவி ஒருவர் பிடிபட்டார்.

இச்சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலம், சோனிபட் நகரிலுள்ள ஓ பி ஜிண்டால் அனைத்துலகப் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

அண்மையில் நடந்த இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது. விடுதிக் காவலர்கள் அந்தப் பயணப்பெட்டியைத் திறப்பதும் அதனுள் மாணவி ஒருவர் மறைந்திருப்பதும் அதில் தெரிகிறது.

மாணவிகளில் ஒருவரே அதனைத் தம் கைப்பேசியில் பதிவுசெய்து வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப் பயணப்பெட்டிக்குள் மாணவி ஒருவர் இருப்பதை விடுதிக் காவலர்கள் அல்லது பல்கலைக்கழக அதிகாரிகள் எப்படிக் கண்டுபிடித்தனர் என்பது தெரியவில்லை. ஆனால், மாணவியின் திட்டம் பலிக்கவில்லை என்பது மட்டும் உறுதியானது.

இதுகுறித்துக் கருத்துரைத்த பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி, “எங்கள் மாணவர்கள் குறும்புக்காரர்கள். ஆயினும், பாதுகாப்பு வலுவாக இருப்பதால் அம்மாணவி பிடிபட்டுவிட்டார். இது ஒன்றும் பெரிய விஷயமன்று. இதன் தொடர்பில் எவரும் புகாரளிக்கவில்லை,” என்றார்.

அம்மாணவிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்