கைப்பேசியை பறிமுதல் செய்த ஆசிரியரை காலணியால் தாக்கிய மாணவி

1 mins read
77837b2a-330b-41b4-a68c-d14b3b471dce
கைப்பேசியை பறிமுதல் செய்த ஆசிரியரை காலணியால் அடித்த மாணவி. - படம்: ஊடகம்

ஆந்திரா: ஆந்திராவில் கைப்பேசியைப் பறிமுதல் செய்த பெண் ஆசிரியரை மாணவி ஒருவர் தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் பீமுனிப்பட்டிணம் பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தினுள் தனது கைப்பேசியைப் பயன்படுத்தியதால் கல்லூரி விதிமுறைகளை மீறியதாக அவரது கைப்பேசியை அங்கு பணியாற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவி ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கைப்பேசியின் விலை ரூ.12,000 எனவும் அதனை உடனடியாகத் திருப்பித் தரவில்லை என்றால் தனது காலணியைக் கொண்டு அடிப்பேன் என மிரட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்ததால் அந்த மாணவி தனது காலணியால் ஆசிரியரைத் தாக்கியுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்துபோன மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கிருந்து மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் காணொளியாகப் பரவியது.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்த கல்லூரி, மாணவிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்