சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ள அரசுப் பள்ளி மாணவனிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று அதிமுக, பாஜக மற்றும் அமமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட ஆசிரியர் அந்த மாணவனை பரிசோதித்ததில் இடுப்பில் கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அதையடுத்து அதைக் கைப்பற்றிய ஆசிரியர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அந்த மாணவனை ஒப்படைத்தனர்.
தலைமை ஆசிரியர் இது தொடர்பாக எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். காவலர்கள் சம்பவ இடம் விரைந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மாணவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வந்த மாணவனிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர், பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக அரசுதான் முழுக் காரணம் என அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, “அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட, 11ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் கையில் அதிமுக ஆட்சி மடிக்கணினியைக் கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப் பொருள்தான் சென்றுள்ளது. கஞ்சா, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதன் மூலம், ‘ஸ்டாலின் மாடல்’ திமுக அரசு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது,” என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “அப்பா’ என்ற அடைமொழிக்கு ஆசைப்படும் முதல்வர் ஸ்டாலின், தனது கண்முன்னே பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம். பதின்ம வயது பள்ளி மாணவனுக்குக் கூட கஞ்சா விற்கப்படுகிறது என்றால், திமுகவின் ஏவல்துறை எந்தளவுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்?
தொடர்புடைய செய்திகள்
தங்களின் அவல ஆட்சிக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீதும், தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடுபவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதில் மட்டுமே திமுக அரசு அதீத கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி இருந்தால் நமது சமூகக் கட்டமைப்பை அரித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்?”
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சா பொட்டலம் என்பது வருங்கால சந்ததியினரின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகளில், தற்போது போதைப் பொருள் புழக்கமும் சேர்ந்துகொண்டிருக்கிறது.
பிறகு எப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்? 16 வயது சிறுவனுக்குக் கூட கஞ்சா கிடைக்கும் இடம் தெரிந்திருக்கிறது; ஆனால் சென்னை மாநகரக் காவல்துறைக்கு இன்னும் தெரியவில்லை,” என்று கண்டனக் குரல் கொடுத்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ தவறிய திமுக அரசின் காவல்துறையால், கல்வி பயிலும் பள்ளிக்கே மாணவர்கள் கஞ்சா பொட்டலத்தை எடுத்து வரும் அளவுக்கான சூழல் உருவாகியுள்ளது.
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கும் அடிப்படை காரணமாகத் திகழும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை மென்மேலும் ஊக்குவிப்பதுதான் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனையா? என்று தலைவர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

