பிரயாக்ராஜ்: திரிவேணி சங்கமத்திற்கு நடந்து செல்ல முடியாத பக்தர்களை தங்களின் இருசக்கர வாகனங்களில் அழைத்துச் சென்று, மீண்டும் கொண்டுவந்துவிட்டு அவர்கள் கொடுக்கும் பணத்தைப் பெற்று வருமானம் ஈட்டி வருகிறார்கள் கல்லூரி மாணவர்கள்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவதால் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனால், ரயில், விமானம், பேருந்துகளில் வரும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்திற்கு வெகுதொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதனைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட உள்ளூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தங்களது இருசக்கர வாகனங்களில் பக்தர்களைத் திரிவேணி சங்கமப் பகுதிக்கு அழைத்துச் சென்று, மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்கள்.
அதற்காக அவர்களிடம் ஒரு தொகையையும் சம்பளமாகப் பெறுகின்றனர். இதன்மூலம் அவர்கள் நாளொன்றுக்கு ரூ.5,000 வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
இதனால், வெகுதொலைவு நடக்க முடியாத பக்தர்களும் விரைவில் அங்கு சென்று புனித நீராடியபிறகு மீண்டும் பழைய இடத்திற்கு வந்துசேர்வது மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த சேவை தங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.