புதுடெல்லி: புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மும்மொழி கல்விக் கொள்கையால் மாணவர்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக்கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உடனடியாகக் களைய வேண்டும் என்று அது கூறியுள்ளது.
அத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளைக் கட்டாயம் கற்கவேண்டும் என்ற விதியை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின்போது, புதிய மொழிகளைக் கற்பிக்கத் தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதையும், போதிய உள்கட்டமைப்பை உருவாக்குவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டுமின்றி நாட்டின் பிற கல்வி வாரியங்களையும் மத்திய அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்திய மற்றும் மாநில மொழிகள் மீது தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், 6ஆம் வகுப்பில் இக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டிருந்தால் நடப்பாண்டில் அதற்கு விலக்கு அளித்து, அடுத்த ஆண்டு முதல் தொடங்கலாம் என்று உத்தரவிட்டனர்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று மொழிகளில், இரு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகப் படிக்கலாம். இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அடுத்தகட்ட விசாரணை 10 நாள்களுக்குப் பின் நடைபெறும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.


