திடீர் மரணங்களுக்கும் கொவிட் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை: மத்திய அமைச்சர்

1 mins read
c111873c-a14d-4c4f-ab9c-6783b574c307
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் கொவிட் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று மத்தியச் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி “ கிட்டத்தட்ட 35 முதல் 55 வயதுடையவர்கள் குறிப்பாக இளையர்கள் திடீர் மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். இதற்கு கொவிட்-19 காலத்தில் எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் காரணமா,” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதாப் ராவ், “இந்தியாவில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளையர்களின் காரணம் தெரியாத திடீர் மரணங்கள் பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், தேசியத் தொற்று நோயியல் நிறுவனமும் இணைந்து 2023 மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஓர் ஆய்வை மேற்கொண்டன.

“அதில் ஏதேனும் ஒரு கொவிட் தடுப்பூசி ஒருமுறை எடுத்துக் கொண்டவர்களுக்குத் திடீர் மரணத்திற்கான வாய்ப்பு இல்லை என்பதும், இரண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்குத் திடீர் மரணத்திற்கான வாய்ப்பு, மேலும் குறைவு என்பதும் இந்த ஆய்வின் மூலம் முதலில் உறுதிப்படுத்தப்பட்டது,” என்று பிரதாப் ராவ் கூறினார்

மாண்டவர்களில் பெரும்பாலானவர்கள் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம், 48 மணி நேரத்திற்கு முன்பாகக் கடுமையாக உடற்பயிற்சி, குடும்பத்தில் ஏற்கனவே சிலர் திடீர் மரணம் அடைந்தது போன்ற பின்னணிகளைக் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்