புதுடெல்லி: ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்தடைந்த ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்த சம்பவம் பயணிகளைப் பீதியில் ஆழ்த்தியது.
டெல்லி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே துணை மின் அலகு ஒன்றில் தீப்பிடித்தது. இதனால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, பயணிகளும் பணியாளர்களும் மிகுந்த பாதுகாப்புடன் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.
திடீர் தீ விபத்து காரணமாக விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், தீ விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
விமானம் தரையிறங்கிய பிறகு தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருவதாக வெளியாகும் அண்மையத் தகவல்களால் விமானப் பயணிகள் பீதியில் உள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

