புதுடெல்லி: இந்தியாவில் சர்க்கரை விநியோகம் குறைந்துள்ளதாலும் பண்டிகைக் காலத் தேவை அதிகரித்துள்ளதாலும் அதன் விலை கடந்த ஒரு மாதத்தில் 10 விழுக்காடுவரை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சில்லறைப் பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 17 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்து, இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கைத் தாண்டியது.
இந்நிலையில், சர்க்கரை விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் உயர்த்தும். எனவே, ஏற்றுமதித் தடை மற்றும் இருப்புப் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பிறகு, விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.
அதே வேளையில், விலையேற்றமானது சர்க்கரை ஆலை உரிமையாளர்களின் லாபத்தை உயர்த்தும் என்று வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய வணிக மையமான கோலாப்பூரில் சர்க்கரை மொத்த விலை 10.2 விழுக்காடுவரை உயர்ந்து, 100 கிலோ ரூ.4,716 ஆகப் பதிவாகியுள்ளது.
பண்டிகைக் காலத்தையொட்டி தேவை அதிகரித்துள்ளபோதிலும், சர்க்கரை ஆலைகள் இருப்பைத் தடுத்து நிறுத்தி, சிறுக சிறுக வெளியிட்டு வருவதாக மும்பை சர்க்கரை வணிகர்கள் சங்கத் தலைவர் அசோக் ஜெயின் கூறினார்.
பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது பாரம்பரிய இனிப்புகளின் பயன்பாடு அதிகரிப்பதால், வழக்கமாக ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சர்க்கரைக்கான தேவை கூடும்.
இந்நிலையில், உள்நாட்டு உற்பத்தியைவிட பயன்பாடு அதிகமாக இருந்ததாலும், ஆலைகள் 800,000 டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ததாலும், அக்டோபர் 1 முதல் தொடங்கும் புதிய பருவத்தில் சர்க்கரை இருப்பு 3.5 மில்லியன் டன்னாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆகக் குறைந்த அளவாகும்.
நவம்பரில் புதிய கரும்பு அரைவை தொடங்கிய பிறகே விநியோகம் சீராகும் என்று மும்பை வணிகர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, பிஸ்கட், இனிப்புத் தயாரிப்பு நிறுவனங்கள், மென்பான நிறுவனங்கள் போன்றவை சர்க்கரையின் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில் கையிருப்பை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.


