புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட கூடுதலாகப் பதிவாகும் என்றும் மேற்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும் என்று அம்மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல, குறைந்தபட்ச வெப்பநிலையும் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில், வடக்கு, கிழக்கு, மத்திய, வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலாக இரண்டு அல்லது நான்கு நாள்களுக்கு அனல் வீசும்,” என்று வானிலை ஆய்வு மையத் தலைவர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா இணையவழி செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
வழக்கமாக, அக்காலகட்டத்தில் நான்கு முதல் ஏழு நாள்களுக்கு வெப்ப அலை வீசும்.
தமிழ்நாடு, வடகர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களிலும் கூடுதல் நாள்கள் அனல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, கோடைக்காலத்தில் மின்சாரத்திற்கான தேவையும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மின்தேவை வழக்கத்தைவிட கூடுதலாக 9%-10% தேவைப்படலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சென்ற 2024 மே 30ஆம் தேதி இந்தியாவின் உச்ச மின்தேவையானது, கணிப்பைவிட 6.3% அதிகரித்து 250 கிகாவாட்டுகளைத் தாண்டியது.