புதுடெல்லி: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக சன்னி ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மாநிலத்தின் நீதி மற்றும் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.சுதாகரனின் பங்களிப்பைப் பாராட்டினார். அவர் கேரள மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சேவையாற்றிய போர் வீரன் என்று புகழாரம் சூட்டினார்.
கேரளத்தில் தற்போதுள்ள அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 23ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளதால், அங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னதாக, கேரள மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுதாகரனுக்குப் பதிலாக மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் சன்னி ஜோசப் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கேரள காங்கிரஸ் தலைவராக கண்ணூரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், பேராவூர் சட்டமன்ற உறுப்பினருமான சன்னி ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் மாநிலத் தலைவர் சுதாகரன் காங்கிரஸ் காரியக் குழுவிற்கு நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

