கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் கரையோரப் பூந்தோட்டத்தின் ‘சூப்பர் ட்ரீ’

1 mins read
f8e63573-342e-40c4-a67d-abfdb5f0bf0f
பத்து மாடிகளைக் கொண்ட கோபுரத்தில் இரண்டு மின்தூக்கிகளையும் மாடிக்கு 25 படிகளையும் கொண்டிருக்கும். ஓவியர் கற்பனை. - படம்: இணையம்

சென்னை: சிங்கப்பூரின் கரையோரப் பூந்தோட்டத்திலுள்ள ‘சூப்பர் ட்ரீ’ எனப்படும் பெருமரங்களைப் போன்ற 34 மீட்டர் உயரமான கட்டமைப்புகள், விரைவில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் இடம்பெற உள்ளதாக அண்மைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பூங்காவின் கிழக்கு முனையில் அமைக்கப்படவுள்ள இந்தக் கட்டமைப்பு, அடுத்த ஆண்டின் தொடக்கப் பகுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

“சிங்கப்பூரின் சூப்பர் ட்ரீ போன்ற ஒன்று அமைக்கப்படும். செடி, கொடிகளால் போர்த்தப்படும் இது, கொடை போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும்,” என்று தோட்டக்கலைத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பத்து மாடிகளைக் கொண்ட அந்தக் கோபுரம் இரண்டு மின்தூக்கிகளையும் மாடிக்கு 25 படிகளையும் கொண்டிருக்கும். குளிரூட்டப்பட்ட கண்ணாடி காட்சிமாடத்திலிருந்து பார்வையாளர்கள் நகரக்காட்சியைக் காண முடியும்.

உள் பகுதியில் 1,200 சதுர அடி பரப்பளவும் வெளிப்புற மாடத்தில் 1,850 சதுர அடி பரப்பளவும் கொண்டுள்ள இந்தப் ‘பெருமரம்’, சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் விதமாக அமைய இருக்கிறது.

நீடித்த நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு செயல்திறன் மிக்க மூலப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என். எழிலன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்