சென்னை: உரிய தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின்னர் எந்தவொரு திரைப்படத்தையும் தடை செய்ய முடியாது என்று ‘தக் லைஃப்’ பட வெளியீடு தொடர்பான வழக்கை விசாரித்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
அந்தப் படம் வெளியிடப்படுவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இ்துகுறித்து அம்மாநில அரசு உரிய விளக்கத்தை தெரிவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்துள்ள படத்தை கர்நாடகாவில் வெளியிட திடீர் எதிர்ப்பு கிளம்பியது.
படத்தை வெளியிட்டால் திரையரங்குகள் கொளுத்தப்படும் என கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்தது.
‘தக் லைஃப்’ படத்தை திரையிடும் திரையரங்குகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடக் கோரி நடிகர் கமல்ஹாசன் தரப்பு பெங்களூரு உயர் நீதிமன்றத்தை அணுகியது. அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றமோ, கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகளை விமர்சித்ததுடன், அவர் மன்னிப்பு கோரவும் அறிவுறுத்தியது.
இதையடுத்து கமல்ஹாசன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்தப் புதிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தக் லைஃப் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
ஒரு திரைப்படத்தை ஏற்க வேண்டுமா, இல்லையா என அதைப் பார்த்த பின்னர் மக்களே முடிவு செய்வார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
‘தக் லைஃப்’ திரைப்படம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்ட நிலையில், 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“மேலும், கன்னட மொழி குறித்து கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. உயர் நீதிமன்றம் எப்படி இவ்வாறு கூறலாம்?
சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தின் கடமை,” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று (ஜூன் 17ஆம்) தேதி நடைபெற்ற விசாரணையின்போது தெரிவித்தனர்.