புதுடெல்லி: ஆங்கில மருத்துவம் தொடர்பாகத் தவறான தகவல்களை விளம்பரம் செய்ததாகக் கூறி பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதனையடுத்து, இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவும் அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) நேரில் முன்னிலையாகினர்.
அப்போது, ஆங்கில மருத்துவம் பற்றிய தவறான விளம்பரத்திற்காகவும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக ராம்தேவும் பாலகிருஷ்ணாவும் தெரிவித்தனர்.
ஆயினும், மன்னிப்பை ஏன் எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அவர்களது மன்னிப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
மேலும், “எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று எனக் கூறுகிறீர்கள்? அதற்கு அறிவியல் அடிப்படையிலான சான்று உள்ளதா? இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் ஏதேனும் கோரிக்கை வைத்தீர்களா? வழக்கு விசாரணையில் இருக்கும்போது உங்கள் நிறுவனத்தின் ஊடகப் பிரிவு எவ்வாறு செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியும்?” என்று நீதிபதிகள் கேள்விகளை அடுக்கினர்.
மருந்து பற்றி ஆராய்ச்சி செய்துள்ளதாக ராம்தேவும் பால கிருஷ்ணாவும் கூறியுள்ளனர் என்றும் அது குறித்து அவர்கள் விளக்கம் தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ராம்தேவ் மீதும் பாலகிருஷ்ணா மீதும் அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று தெரிவித்ததுடன், பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.