புதுடெல்லி: திருச்சி அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழரான பாஸ்கரன் என்பவரை நாடுகடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, பாஸ்கரனை நாடுகடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை ஏற்காத அவர், உச்ச நீதிமன்றத்தை அணுகினார். தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மேலும், டெல்லியில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் மனிதாபிமான அடிப்படையில், விசா வழங்கப்படுவதாகவும் அதைப் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்கவும் கோரி தமது மனுவில் கோரியிருந்தார் பாஸ்கரன்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாஸ்கரனை நாடுகடத்த இடைகாலத் தடை விதித்தது. மேலும், பாஸ்கரனின் மேல் முறையீட்டு மனுவுக்குப் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

