புதுடெல்லி: உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் நடைபெறும் அநியாயமான விலையேற்றம், கட்டுப்பாடற்ற லாபம் முதலியவற்றை உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் சில்லறை விற்பனையாளர்களும் இணைந்து நோயாளிகளிடம் நடத்தும் இந்தச் சுரண்டலைப் பகற்கொள்ளை என்று நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மருந்து விலைக் கட்டுப்பாடு தொடர்பான வழக்கை விசாரித்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் ஒரு சில்லறை விற்பனையாளருக்கு ரூ.2,700க்கு வழங்கும் புற்றுநோய் மருந்தை, அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.27,000 என நிர்ணயித்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அடக்க விலையைவிடப் பத்து மடங்கு வரை அதிகமாக அச்சிட்டு விற்பது அப்பட்டமான சுரண்டல் என்றும் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
இது ஏழை நோயாளிகளை வதைக்கும் செயல் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மருந்து விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையமும் மத்திய அரசின் துறைசார்ந்த அதிகாரிகளும் இதுபோன்ற முறைகேடுகளைக் கண்டும் காணாமல் அமைதியாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
உயிர்காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் சாதாரண மக்கள் தங்களது வீடுகள், நிலங்கள், நகைகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் அந்த அமர்வு சுட்டிக்காட்டியது.
மக்களின் வரிப் பணமே தனியார் நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுவதாகக் கவலை தெரிவித்த நீதிபதிகள், இது அரசுப் பணத்தில் நடக்கும் அப்பட்டமான மோசடி என்றனர்.
மத்திய அரசு உடனடியாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
