நடிகையின் பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு முன்பிணை

நடிகையின் பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு முன்பிணை

2 mins read
c4f15d67-2922-4ffd-97c4-e3580725f9b1
மலையாள நடிகர் சித்திக். - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன்பிணை வழங்கி உள்ளது.

நடிகர் சித்திக் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டி இருந்தார்.

2016ஆம் ஆண்டு சித்திக் நடிக்கும் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த பிறகு, மஸ்கட்டில் உள்ள ஹோட்டலில் அவர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நடிகை கூறியிருந்தார்.

மேலும், இதுகுறித்து திருவனந்தபுரம் காவல்துறையிடமும் மின்னஞ்சல் மூலமாக அவர் புகார் அளித்தார்.

அதனையடுத்து, நடிகர் சித்திக் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க செப்டம்பர் 24ஆம் தேதி முன்பிணை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் சித்திக் மனுத் தாக்கல் செய்தார்.

குற்றச்சாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவரைக் காவலில் வைத்து விசாரணை செய்வது தவிர்க்க முடியாதது என தெரிவித்து சித்திக்கின் முன்பிணை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து, செப்டம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சித்திக்கை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், அவரது முன்பிணை மனு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் சித்திக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய முன்பிணை வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அந்த உத்தரவில், சித்திக் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்