தேர்தல் இலவச வாக்குறுதிகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இணக்கம்

தேர்தல் இலவச வாக்குறுதிகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இணக்கம்

படம்: ஃபேஸ்புக்/இந்திய உச்ச நீதிமன்றம்

05 Feb 2026 - 6:13 pm

2 mins read

புதுடெல்லி: இந்திய அரசியல் கட்சிகளின் தேர்தல் நேர இலவச அறிவிப்புகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்குமுன் ‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத’ வகையில் இலவச வாக்குறுதிகளை அல்லது இலவசங்களை அளிக்கும் அரசியல் கட்சியின் சின்னத்தைப் பறிக்க வேண்டும் அல்லது அதன் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

“சூரியனையும் நிலவையும் தவிர்த்து, வேறு எல்லாவற்றையும் இலவசமாகத் தருவோம் என அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களிடம் உறுதியளிக்கின்றன. இதுவும் ஊழலுக்கு ஒப்பானதுதான்,” என்று பொதுநல வழக்கு தொடுத்த வழக்கறிஞர் உபாத்யாயா வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து, “இது முக்கியமான விவகாரம். அதுகுறித்த மனு மார்ச் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்,” என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.

முன்னதாக, 2022 ஜனவரி 25ஆம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு இதே விவகாரத்தில் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இது மிகவும் கடுமையான விவகாரம் என்றும் சில நேரங்களில் இலவசங்களுக்கான வரவுசெலவுத் திட்டம், வழக்கமான வரவுசெலவுத் திட்டத்தை மிஞ்சுவதாக உள்ளது என்றும் அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

தேர்தலுக்கு முன்பாக பொதுமக்களின் பணத்திலிருந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்படும் இத்தகைய பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலவச அறிவிப்புகள், வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, தேர்தல் களத்தில் சமநிலையைக் குலைத்து, தேர்தல் நடைமுறைகளின் தூய்மையைக் கெடுப்பதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

அஸ்வினி குமார் துபே என்ற வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்த மனுவில், இதன் தொடர்பில் ஒரு சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஉச்ச நீதிமன்றம்தேர்தல்இலவசம்வாக்குறுதிஅரசியல்கட்சி