சென்னை: இந்தியாவில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் சுரங்கங்கள் போன்றவற்றால் யானைகளின் வாழ்விடங்கள் சுருங்குவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இந்நிலையில், காட்டு யானைகளைப் பாதுகாக்க இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
யானைகள் சென்றுவரும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநில அரசுகள் உடனடியாக அகற்ற வேண்டும். அந்தத் தடைகளைக் கண்டறிய முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், யானைகளைத் திசைதிருப்ப நெருப்புப் பந்தங்களைப் பயன்படுத்தும் செயல்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய யானைகள், அழியும் தறுவாயில் உள்ள உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் சுமார் 22,446 காட்டு யானைகள் உள்ளன. அவை தங்களின் பாரம்பரிய நிலப்பரப்பில் மிகக் குறைந்த அளவிலேயே தற்போது வாழ்ந்து வருகின்றன.
இதுதவிர, சுற்றுலா, கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வளர்ப்பு யானைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நீதிமன்றம் தனி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவற்றின் மருத்துவப் பதிவேடுகளைப் பராமரிக்கவும் முறையான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகளைப் பல்வேறு விலங்குநல அமைப்புகள் வரவேற்றுள்ளன.
அனைத்துலக தரவுகள்படி காடுகளில் 50,000க்கும் குறைவான ஆசிய யானைகளே உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவிலும், மற்றவை இலங்கை, தென்கிழக்காசியாவிலும் காணப்படுகின்றன.


