புதுடெல்லி: மாதவிடாய் சுகாதாரம் என்பது பெண் பிள்ளைகளின் அடிப்படை உரிமை. எனவே, அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக ‘நாப்கின்’களை வழங்க வேண்டும்.
மாதவிடாய் சுகாதாரம் குறித்து பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய தாக்கூர் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, அனைத்து மாநில அரசுகளுக்கும் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
[ο] அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மக்கும் தன்மை கொண்ட ‘நாப்கின்’களை இலவசமாக வழங்க வேண்டும்.
[ο] மாணவிகள் நாப்கின்களைப் பெற பள்ளிகளில் தானியங்கி இயந்திரங்களை நிறுவ வேண்டும்.
[ο] அனைத்துப் பள்ளிக் கழிவறைகளிலும் தடையின்றி தண்ணீரும் சோப்பு வசதியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
[ο] மாணவிகள் தங்களது சீருடை, நாப்கின்களை மாற்றிக்கொள்வதற்கு ஏதுவாக ‘மாதவிடாய் நல மேலாண்மைப் பகுதிகளை’ அமைக்க வேண்டும்.
[ο] மாற்றுத்திறனாளி மாணவிகள் கழிவறைகளைச் சிரமமின்றிப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவற்றை சிறந்த முறையில் வடிவமைக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
[ο] பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்துவது மிக அவசியம். இதற்காக மூடும் வகையிலான குப்பைத் தொட்டிகள் கழிவறைகளில் வைக்கப்பட வேண்டும்.
“வசதி இல்லாத மாணவிகள் காகிதம் அல்லது அழுக்குத் துணிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கிருமித் தொற்று, அவர்களின் எதிர்காலக் கருவுறுதல் தன்மையைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.
“மாதவிடாய் என்பது வெட்கப்பட வேண்டியதோ அல்லது ரகசியமாகப் பேசப்பட வேண்டியதோ அல்ல.
“மாதவிடாய் காலத் தயக்கத்தால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருப்பதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை.
“இலவச ஆரம்பக் கல்வி என்பது பெண் குழந்தைகளுக்கான இத்தகைய அத்தியாவசிய சுகாதாரச் செலவினங்களையும் உள்ளடக்கியதே,” என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

