தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நொடித்துப்போன ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 mins read
1cfbaa65-9792-408b-b56a-002020b6b7de
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க 2021ஆம் ஆண்டு தீர்வுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.  - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: நிதி நெருக்கடியால் நொடித்துப்போன ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன், கடுமையான நிதி நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக 2019ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியது. அந்நிறுவனத்தை மீட்டெடுக்கும் பொருட்டு 2021ஆம் ஆண்டு தீர்வுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

அதன்படி, ஜலான் கல்ராக் கூட்டு நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியது. இதற்காக முதல் தவணையாக ரூ. 350 கோடி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அந்நிறுவனம் ரூ. 200 கோடியை மட்டும் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய எஸ்பிஐ, கனரா வங்கி ஆகியவற்றின் நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறியதாக ஜலான் கல்ராக் நிறுவனம்மீது குற்றம்சுமத்தப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் வியாழக்கிழமை (நவம்பர் 7ஆம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்வுத் திட்டங்கள் தோல்வி அடைந்ததையடுத்து தற்போதைய மோசமான நிதிச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்