புதுடெல்லி: அமலாக்கத் துறையின் மனுவானது மத்திய அரசு அமைப்புகளின் விசாரணை தொடர்பிலும் அவற்றில் மாநில அரசு அமைப்புகளின் தலையீடு தொடர்பிலும் கடுமையான பிரச்சினையை எழுப்புகிறது என்று இந்திய உச்ச நீதிமன்றம் கருத்துரைத்துள்ளது.
அமலாக்கத் துறை ஜனவரி 8ஆம் தேதியன்று ஐ-பேக் எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தின் சால்ட் லேக் அலுவலகத்திலும் கோல்கத்தாவிலுள்ள அதன் இயக்குநர் பிரத்திக் ஜெயினின் வீட்டிலும் சோதனை நடத்தியது.
நிலக்கரிக் கடத்தல் தொடர்பில் அச்சோதனைகள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால், சோதனைகளின்போது தன் அதிகாரிகள் இடையூறுகளை எதிர்கொண்டதாக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
சோதனையின்போது மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி திடீரெனப் புகுந்து, விசாரணை தொடர்பிலான முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
இதனையடுத்து, மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா, காவல்துறை உயரதிகாரி ராஜீவ் குமார் உள்ளிட்டோர் விளக்கமளிக்கக் கோரி வியாழக்கிழமை (ஜனவரி 15) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள்மீது அளிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளையும் அது நிறுத்திவைத்தது.
“அமலாக்கத் துறை தரப்பிலிருந்து பெருங்கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலளிக்காவிடில் அது சட்டமில்லாத நிலைக்கு வழிவகுக்கும்,” என்று நீதிபதிகள் தரப்பில் கூறப்பட்டது.
“மாநிலச் சட்ட அமலாக்க நிறுவனங்களால் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதைத் தடுக்க இவ்விவகாரத்தை ஆராய்வது அவசியம்,” என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஐ-பேக் வளாகங்களில் நடந்த சோதனைகள் தொடர்பில் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளைப் பாதுகாக்கும்படியும் மேற்கு வங்கக் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வழக்குத் தொடர்பான விசாரணை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

