புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று இந்தியக் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.
அதில் ஈடுபட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
போராட்டம் நடைபெற்றபோது மாணவர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் வீசியதாகப் புகார் எழுந்தது. இதனால் மாணவர்கள் மத்தியில் கடுங்கொந்தளிப்பு ஏற்பட்டதுடன் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
திரு தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தபோதிலும் அத்துமீறிய காவல்துறையினர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள், போராட்டம் நடைபெற்ற இடங்களில் உள்ள அனைத்துக் கண்காணிப்பு, ‘டிரோன்’களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் புகைப்படங்கள், தனிநபர் விவரங்களைச் சமூக ஊடகங்கள் அல்லது பொதுவெளியில் வெளியிடவும் தடைவிதித்தனர்.
குற்றப்பின்னணி இல்லாத மாணவர்கள்மீது எவ்விதக் கடுமையான அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், பல மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியது, மாணவர்கள்மீது தடியடி நடத்தியது ஆகியவை தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் பதிலளிக்க டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், கேரளா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் .
இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

