புதுடெல்லி: பொது இடங்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து அவற்றுக்கான காப்பகங்களில் அடைக்க இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நாய்களால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கி இறக்கும் சம்பவங்கள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்பதை தெருநாய் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் நினைவுகூர்ந்தது.
அத்துடன் பொதுமக்களை தெருநாய்கள் கடிக்கும் ஆபத்தான சம்பவங்களும் அதிகரித்து வருவதாகச் சுட்டிய நீதிபதிகள், தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
இதுதொடர்பான விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம்நாத், சந்திப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) விசாரணை நடத்தியது.
பின்னர் இந்த விவகாரத்தில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பொது விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றைச் சுற்றி உறுதியான வேலிகள் அமைத்து, தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் இந்த வளாகங்களில் இருந்து தெருநாய்களைப் பிடித்து, தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு காப்பகங்களுக்கு அவற்றை மாற்ற வேண்டும்.

